சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 3:51 AM IST (Updated: 9 April 2022 3:51 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சொத்து வரி உயர்வை கண்டித்து, பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சொத்து வரி உயர்வை கண்டித்து, பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 
சொத்து வரி உயர்வை கண்டித்து குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துராமன், துணைத்தலைவர்கள் தேவ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு நடவடிக்கை
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசும் போது கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை. சொத்து வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
ஆரல்வாய்மொழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசார அணி தலைவர் ஜெயபிரகாசை போலீசார் கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆரல்வாய்மொழியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
மண்டைக்காட்டில் பா.ஜனதா பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை (அதாவது இன்று) மண்டைக்காடு பகுதியில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், மாநகர கவுன்சிலர்கள் மீனாதேவ், சுனில்குமார், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் அஜித்குமார், ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தையொட்டி கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story