10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 April 2022 4:55 AM IST (Updated: 9 April 2022 4:55 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே, 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாடியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை பார்த்து வருகிறார்.

பள்ளி மாணவன்

இவரது மனைவி ராமலட்சுமி (40), மகன் இன்பரசன் (16), மகள் உதயஸ்ரீ (4) ஆகியோர் வாடியூரில் வசித்து வருகின்றனர். இதில் மகன் இன்பரசன் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தாயார் ராமலட்சுமி பீடி சுற்றும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்பரசன் தனது தாயாரிடம் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவதாக கூறி உள்ளான். 10-ம் வகுப்பு என்பதால் ஒழுங்காக படித்தால் நல்ல மதிப்பெண் வாங்கலாம், ஆனால் எனக்கு படிப்பு வரவில்லை என தனது தாயாரிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு ராமலட்சுமி, நீ ஒன்றும் கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி உள்ளார்.

பள்ளிக்கு செல்லவில்லை

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில், உடல் வலிக்கிறது, எனவே பள்ளிக்கு செல்லவில்லை என்று இன்பரசன் தனது தாயாரிடம் கூறியுள்ளான். பின்னர் 12 மணிக்கு தூங்கச்செல்கிறேன் என்று கூறி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது ராமலட்சுமி கதவை பூட்டாமல் தூங்கச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவன், தூங்கும்போது தன்னை தங்கை எழுப்பி விடாமல் இருப்பதற்காக கதவை பூட்டி விட்டு தூங்கச் செல்வதாக கூறி விட்டு சென்றான்.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் ராமலட்சுமி மதியம் 1 மணிக்கு அவனை சத்தம் போட்டு அழைத்தார். ஆனால் பதில் எதுவும் வரவில்லை. எனவே வேறு ஒரு சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு இன்பரசன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியபடி உயிர் ஊசல் ஆடிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கீழே இறக்கி தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இன்பரசன் பரிதாபமாக இறந்தான்.

காரணம் என்ன?

இதுகுறித்து சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப்பதிவு செய்தார். சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். இன்பரசன் தூக்குப்போட்டு தற்கொைல செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சுரண்டை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story