கடலில் கூண்டு கட்டி மீன் வளர்த்து ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்


கடலில் கூண்டு கட்டி மீன் வளர்த்து ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 9 April 2022 5:42 PM IST (Updated: 9 April 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

கடலில் கூண்டு கட்டி மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நாகையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகப்பட்டினம்:
கடலில் கூண்டு கட்டி மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நாகையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். 
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இலங்கை அரசினால் பாதிக்கப்பட்ட 24 விசைப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மீன் இறங்கு தளம்
 
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், மீனவர்கள் நலனை காக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அயல்நாட்டு கடற்படையினரால் தாக்குதல், சிறைபிடித்தல், சேதம் விளைவித்தல் போன்ற நிகழ்வுகளில் இருந்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. நாகை அக்கரைப்பேட்டையில் மீன் இறங்குதளம் விரிவுபடுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
நிவாரணம் வழங்க ஆணை
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற அறிவிப்பின்படி இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையின் பல்வேறு கடற்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் வகையில் 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், 14 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.5 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க ஆணை பிறப்பித்து அதனை செயல்படுத்தி வருகிறார். 
இவ்வாறு அவர் பேசினார். 
ரூ.1 கோடியே 13 லட்சம் காசோலை
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நகரசபை தலைவர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் ஜேய்ஸ்ஆலிவ்ரேச்சல், உதவி இயக்குனர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட 24 படகு உரிமையாளர்களுக்கும் மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண தொகைக்கான காசோலையினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பேட்டி 
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மீனவர்களுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மு.க. ஸ்டாலின் திட்டங்களை தீட்டி வருகிறார். தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய வெளியுறவு துறை மந்திரியை வலியுறுத்தி வருவதோடு அடிக்கடி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி வருகிறார். 
புதிய திட்டம்
மீனவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார். நமது மீனவர்கள் எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். 
இந்த பிரச்சினையிலிருந்து தீர்வு பெற கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். கடலில் கூண்டு கட்டி அதில் மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.  
----


Next Story