வேலூர் அருகே ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை திருட்டு


வேலூர் அருகே ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 April 2022 5:52 PM IST (Updated: 9 April 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே பட்டப்பகலில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர் அருகே பட்டப்பகலில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ராணுவவீரர் வீட்டில் நகை திருட்டு

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள சின்னதெள்ளூர் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் பூபாலன். இவர் காஷ்மீரில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராதிகா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 
பூபாலன் ராணுவவீரர் என்பதால் வீட்டுக்கு தேவையான பொருட்களை ராதிகா காட்பாடியில் உள்ள ராணுவ கேண்டீனில் வாங்குவது வழக்கம். அதன்படி அவர் கடந்த 7-ந் தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு ராணுவ கேண்டீனுக்கு சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு மாலையில் ராதிகா வீடு திரும்பினார்.

வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அறைகளில் துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து அவர் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு ராதிகா மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராதிகாவின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த அல்லது நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் தான் அவர் ராணுவ கேண்டீனுக்கு சென்று வீடு திரும்புவதற்குள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் சிம்பா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மாதிரியை சேகரித்தனர். வீட்டில் மோப்பம் பிடித்த சிம்பா அந்த பகுதியில் சிறிது தூரம் ஓடிச்சென்று விட்டு திரும்பியது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இந்த திருட்டு குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகிறார். 
வேலூர் அருகே பட்டப்பகலில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story