நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடைமழை முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடைமழை முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 April 2022 5:57 PM IST (Updated: 9 April 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடைமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கூடலூர்: 

முல்லைப்பெரியாறு  அணை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உச்ச நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
இந்த அணையின் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது. தற்போது இந்த பகுதிகளில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி வீதம் இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 350 கனஅடியாக அதிகரித்தது. 
முல்லைப்பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 125.15 அடியாக இருந்தது. அணையில் இருந்து 3,650 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று  முல்லைப்பெரியாறு அணையில் 43.6 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 30 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதனிடையே நேற்று  மாலை முதல் இன்று காலை வரை தேனி மாவட்டத்தில் கோடைமழை பெய்தது. அதன்படி கூடலூரில் 3.8 மி.மீ, சண்முகா நதியில் 11.5 மி.மீ, உத்தமபாளையத்தில் 12 மி.மீ., போடியில் 39.6 மி.மீ. மழையளவு பதிவாகி இருந்தது. 

Next Story