வளர்ச்சி பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்


வளர்ச்சி பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 9 April 2022 7:26 PM IST (Updated: 9 April 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நரிக்குறவர், பழங்குடியினர், விளிம்பு நிலையில் குக்கிராமங்களில் உள்ள குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப்பட்டா, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

வளர்ச்சி பணிகள்

நலத்திட்ட உதவிகள் வழங்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து நீண்டகால தடுப்பு பணிகளுக்கு திட்டமிடல் வேண்டும். 

அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகள் பயன்பெறும் வகையில் அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், நிறைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம்

மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகள் இடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, மஞ்சப்பை பயன்பாட்டை மீண்டும் முழுவீச்சில் கொண்டு வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீடிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக்கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story