விஷம் குடித்து பெண் தற்கொலை
செங்கம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
செங்கம்
செங்கம் அருகே உள்ள கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார் (வயது 28), டிரைவர். இவருடைய மனைவி நர்மதா (23). கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பபினேஷ் (4), அபினேஷ் (1) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இருவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் நர்மதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து நர்மதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து செங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நர்மதாவின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து தரவேண்டும் என கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை உடனடியாக செய்து உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story