வாலிபரை கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்


வாலிபரை கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 9 April 2022 9:44 PM IST (Updated: 9 April 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்

மங்கலம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வேலை தேடி வந்த வாலிபரை கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் ேபாலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் ெகாலை
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 22), அவருடைய தம்பி பிரேஜ்லால் (18) ஆகியோர் வேைல தேடி திருப்பூர் வந்தனர். பின்னர் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் பல்லடம் பஸ் நிலையம் பகுதியில் செயல்படும் ஒரு ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்று தங்கினர். அப்போது இவர்களுக்கும், ஏஜென்சியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து ராஜ்குமாரையும், அவரது தம்பி பிரேஜ்லாலையும் பலமாக தாக்கினர். இதில் இருவரும் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்களை ஒரு வேனில் ஏற்றி சின்னகாளிப்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தள்ளி விட்டு சென்றனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பிரேஜ்லால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொைல தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இதைத் தொடர்ந்து பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை மாவட்டம்  அடைப்பான் வயல் அண்ணாநகரை சேர்ந்த  நிர்மல் (35), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜய்பாலாஜி (34),   கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அண்ணாநகரை சேர்ந்த  முகமது சுபேர் (34), கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த ராஜேஷ்  (29) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வேலை தேடி புரோக்கர் ஒருவர் மூலம் ராஜ்குமாரும், அவருடைய தம்பி பிரேஜ்லாலும் வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரையும் மறுநாளே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் அவர்கள், நீண்ட தொலையில் இருந்து பயணம் செய்து வந்துள்ளதால் உடல் வலியாக உள்ளது. எனவே 2 நாட்கள் தங்கி விட்டு அதன்பின்னர் நாமக்கல் செல்கிறோம் என்றனர். 
தாக்கினோம்
ஆனால் நாங்கள் அவர்கள் இருவரிடமும் உடனே நாமக்கல் போக வேண்டும் என்றோம். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களின் செல்போனை பறித்துக்ெகாண்டோம். பின்னர் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்து குச்சி மற்றும் தடியால் அவர்களை கடுமையாக தாக்கினோம். இதில் இருவரும் மயக்கம் அடைந்தனர். உடனே ஒரு வேனில் அவர்களை தூக்கிப்போட்டு சின்னகாளிபாளையம் காட்டுப்பகுதியில் தள்ளி விட்டு சென்றோம். இதில் ராஜ்குமார் இறந்து விட்டார்.
இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story