வெயில் சுட்டெரித்த நிலையில் புதுக்கோட்டையில் திடீர் மழை


வெயில் சுட்டெரித்த நிலையில் புதுக்கோட்டையில் திடீர் மழை
x
தினத்தந்தி 9 April 2022 9:51 PM IST (Updated: 9 April 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென மழை பெய்தது.

புதுக்கோட்டை:
வெயில் உக்கிரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக 98 டிகிரி அளவில் உள்ளது. ஒரு சில நாட்களில் 100 டிகிரியை தொட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர்.
மேலும் இளநீர், பழச்சாறுகளையும் குடித்து வருகின்றனர். வெள்ளரி பிஞ்சுகள் உள்பட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு பழக்க வழக்கங்களை கையாள தொடங்கி உள்ளனர். அதேநேரத்தில் வெயிலில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது வெப்பத்தில் இருந்து தப்பிக்க குடைகளை பிடித்தப்படியும் செல்வதை காணமுடிகிறது.
திடீர் மழை
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று காலை வெயிலின் தாக்கம் இருந்தது. பகல் 12.30 மணிக்கு மேல் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு லேசாக தூறல் மழை பெய்தது. அதன்பின் மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த காற்றும் வீசியது. அதன்பின் தூறல் மழையும் பெய்தது. 
இந்த மழை தொடர்ந்து தூறியபடி இருந்தது. திடீர் மழையினால் மின்வெட்டும் ஏற்பட்டது. மின்சார வினியோகம் விட்டு, விட்டு வந்தது. திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை வெயில் உக்கிரம் குறைந்து சிறிது குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவரங்குளம், கீரனூர்
திருவரங்குளம் வட்டார பகுதிகளான மேட்டுப்பட்டி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து பலத்த காற்றுடன் லேசான தூறல் மழை பெய்தது.
கீரனூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம், மார்க்கெட், வடக்கு ராஜவீதி பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது.  
கீரமங்கலத்தில் மழை
கீரமங்கலம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்தனர். அதேபோல நேற்று இரவு மற்றும் இன்று மதியம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. காற்றில் தென்னை மட்டைகள், மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்ததால் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. கீரமங்கலம் மின்வாரிய ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் மின்கம்பிகளில் கிடந்த மரக்கிளைகளை அகற்றி ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு கொடுத்தனர்.

Next Story