4 ஆயிரம் மீனவர்களுக்கு இலவச அரிசி; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் 4 ஆயிரம் மீனவர்களுக்கு இலவச அரிசியை, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 4 ஆயிரம் மீனவர்களுக்கு இலவச அரிசியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
மீனவர்களுக்கு அரிசி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் பணியாற்றும் மீனவ தொழிலாளர்கள் மீன்பிடி தடைகாலத்தில் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில், விசைப்படகுகளில் பணியாற்றக்கூடிய சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நேற்று நடந்தது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மீனவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் கொள்கைகளையும், எண்ணங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இது மட்டுமின்றி தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பந்தல்
தொடர்ந்து அண்ணா நகர் பகுதி தி.மு.க. சார்பில், டூ.வி.புரத்தில் எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு, மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.
பின்னர் தூத்துக்குடி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு தூத்துக்குடி மின்சார வாரியத்தில் பணியாற்றி, பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 10 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் தூத்துக்குடியில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 75 பேருக்கு புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், உதவி கலெக்டர் சுப்பிரமணியன், தாசில்தார் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story