தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டன-கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை என்றும், தி.மு.க. ஆட்சியில் தான் 48 அணைகள் கட்டப்பட்டதாக கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கிருஷ்ணகிரி:
பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கையை விளக்கியும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நேற்று இரவு நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
48 அணைகள்
பொதுக்கூட்டத்தின் மூலம் இயக்கத்தில் புரட்சி செய்தவர் பேரறிஞர் அண்ணா. எல்லோரும் கொரோனா அச்சத்தில் இருந்த போது கொரோனாவிற்கு பயப்படாத ஒரே நபர் நமது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். ‘நான் முன்னின்று பணி செய்தால் தான் அனைவரும் பணியாற்ற முன் வருவார்கள்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கருணாநிதி ஆட்சியில் இருந்து சென்ற போது 1¼ லட்சம் கோடி கடன் இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி முடிவில் 7 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன.
ஒரு அணை கூட கட்டவில்லை
ஆனால் இத்தனை லட்சம் கோடி கடன் வைத்து சென்ற அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எங்காவது ஒரு அணையாவது கட்டினார்களா?. 15 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்த என்னாலேயே கடந்த ஆட்சியில் என்ன செய்து வைத்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், நகர செயலாளர் நவாப், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story