கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 April 2022 10:50 PM IST (Updated: 9 April 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம்:
பல்லடம் அருகே கழிவுநீர் கால்வாயில் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாய ஆலைகள்
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகள் இயங்கி வருகின்றன.  இதில் சில நிறுவனங்கள் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலத்திற்குள் செலுத்தியதால் கரைப்புதூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. பொது மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, கரைப்புதூர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாய கழிவு நீர் அங்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் அருகில் உள்ள நொய்யல் ஆறு, குளம், கிணறு உள்ளிட்ட பகுதிகளில் விடப்பட்டது. 
இந்தநிலையில் சில சாய ஆலை நிறுவனங்கள் மழைகாலங்களில் அருகிலுள்ள குட்டைகள், கழிவுநீர் கால்வாய்களில், சட்டவிரோதமான முறையில் சாய கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன. அந்தவகையில் நேற்று கரைப்புதூர் சமுதாய நலக் கூடத்திற்கு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில், தண்ணீர் நீல நிறத்தில் வந்தது. 
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நடவடிக்கை
 கரைப்புதூர் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் முறைகேடாக சாய கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் பெயரளவுக்கு ஆய்வு செய்துவிட்டு கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர். இங்குள்ள சாய ஆலைகள் குறிப்பிட்ட அளவு சாயக்கழிவு நீரை மட்டும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பிவிட்டு கணக்கில் காட்டாமல் சாயமேற்றப்படும் நீரை, ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்துகின்றனர்.
மேலும் பயன்படுத்தாமல் உள்ள கிணறுகளில் சாயக்கழிவு நீர் இறக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால்இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் வரும் நீர், சாயக்கழிவு நீராகவே வருகிறது. அந்த நீரை விவசாயம், மற்றும் வீட்டு பயன்பாடு உள்பட எதற்குமே பயன்படுத்த முடியாது. மேலும் நீர் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுகிறது.எனவே முறைகேடாக சாய கழிவுநீரை வெளியேற்றி வரும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளில், கிணறுகளில், சாயக்கழிவு நீரை வெளியேற்றாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story