தமிழ் புத்தாண்டையொட்டி வெல்லம் விலை உயர்வு
தமிழ் புத்தாண்டையொட்டி வெல்லம் விலை உயர்ந்தது. 30 கிலோ எடை கொண்ட சிப்பம் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நொய்யல்,
கரும்பு விவசாயிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, காளிபாளையம், வேட்டமங்கலம், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
கரும்புகளை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,200 வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.
சிப்பம் ரூ.1,200-க்கு விற்பனை
வாங்கிய கரும்புகளை சாறுபிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை என தயார் செய்கின்றனர். பின்னர் அதனை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,140-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,150-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,450-க்கும் விற்பனையானது. தமிழ் புத்தாண்டையொட்டி வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் வெல்ல சிப்பங்களை அதிக விலைக்கு வாங்கி சென்றனர். இதன் காரணமாக வெல்லத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story