புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி திட்டத்தை புதுப்பிக்கும் முயற்சி
புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி திட்டத்தை புதுப்பிக்கும் முயற்சி-கி.வீரமணி பேச்சு
காரைக்குடி,
நீட்தேர்வு, புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநில உரிமைகளை மீட்கவும் திராவிடர் கழகத்தின் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரையிலான பிரசார பயணத்தை அதன் தலைவர் கி. வீர மணி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக காரைக்குடி ஐந்து விளக்கு அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சாமி திராவிடமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைகறை வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் பிராட்லா தொடக்க உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கல்வி அனைவரின் அடிப்படை உரிமை. இதனை சீர்குலைத்து, வேறுபடுத்தி பிரித்தாள நினைக்கும் சக்திகளுக்கு தமிழகத்தில் இடமளித்து விடக் கூடாது. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதற்கான போராட் டத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். வருங்கால தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. தமிழக அரசு சமத்துவம், சமூக நீதிக்காக சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் குரல் எழுப்பி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நியமனத்தால் வந்தவர்கள் நிறுத்தி வைப்பது நியாயமல்ல. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை என்பது மீண்டும் புதிய வடிவில் குலக்கல்வி திட்டத்தை புதுப்பிக்க நினைக்கும் செயலாகும். 16 நாட்களில் 13 முறை டீசல், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கல்லல் கரு.அசோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் இளையகவுதமன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story