திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை


திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை
x
தினத்தந்தி 10 April 2022 1:59 AM IST (Updated: 10 April 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. உப்பிலியபுரத்தில் மின்னல்தாக்கியதில் 50 நெல் மூட்டைகள் எரிந்தன.

திருச்சி, ஏப்.10-
திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பலத்த மழை பெய்தது. உப்பிலியபுரத்தில் மின்னல்தாக்கியதில் 50 நெல் மூட்டைகள் எரிந்தன.
பலத்த மழை
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. 2-வது நாளாக நேற்று ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருச்சி மாநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருச்சி கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், மலைக்கோட்டை தில்லைநகர், கே.கே.நகர் பகுதிகளில உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி
துவரங்குறிச்சி பகுதியில் நேற்று மாலையில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.  இந்த நிலையில் அய்யனார்கோவில்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஆஸ்பெட்டாஸ் கூரை வீட்டின் மேற்பகுதியில் மரம் ஒன்று விழுந்தது. இதில் மேற்கூரை சேதம் அடைந்தன. வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஒடிந்து விழுந்த மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தினர்.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில்  கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டி (60) என்பவரது தோட்டத்தில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.  அதுமட்டுமின்றி தோட்டத்தில் உள்ள கொட்டகையிலும் தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில்  கொட்டகையில் இருந்த   50 நெல்மூட்டைகள், 20 உர மூட்டைகள், 300 தேங்காய், 200 சாக்குகள் எரிந்து நாசமாயின.
மழை அளவு
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
நவலூர் கொட்டப்பட்டு 12.40, பொன்மலை 13, திருச்சி ஜங்ஷன் 15, திருச்சி டவுன் 6 ஆகும். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 1.93 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Related Tags :
Next Story