கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்கு


கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்கு
x
தினத்தந்தி 10 April 2022 2:08 AM IST (Updated: 10 April 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த செல்வராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் கணேசன் துணை தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மானாமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தோம். அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும்படி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை அங்கிருந்து மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அறுவை சிகிச்சை முடிந்தபின் கொரோனா பரிசோதனை செய்யாமலேயே கொரோனா தீவிர சிகிச்சை பிரிவிற்கு எனது கணவரை மாற்றினர். முறையான தகவல் அளிக்காமல், அடிப்படை வசதிகள் செய்து தராமல் லட்சக்கணக்கான ரூபாயை மட்டும் செலுத்தும்படி கூறினர். ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் கட்டியுள்ளோம். ஆனால் 4 லட்சத்து 69 ஆயிரத்து 554 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்தனர்.
இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எனது கணவர் இறந்துவிட்டார். தனியார் மருத்துவமனையில் அரசு நிர்ணயித்ததை விட, கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து இந்திய மருத்துவ கவுன்சில், சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story