தேரோடும் வீதிகளில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந்தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேரோடும் வீதிகளில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந்தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேரோடும் வீதிகளில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பெரியகோவில் தேரோட்டம்
தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். அப்போது அவர் தேரோடும் 4 வீதிகளிலும் வலம் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது. இத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் பொருட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மனுடன் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும்.
நின்று செல்லும் இடங்கள்
தேர் வடம் பிடிக்கப்பட்டு பிற்பகல் தேர் புறப்படும் இடமாகிய மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும். இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல் ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் நடைபெறும்,
மேலராஜவீதியில், சந்துமாரியம்மன் கோவில், கொங்கணேஸ்வரர் கோவில், மூலைஅனுமார் கோவில் ஆகிய கோவில்களில் நின்று செல்லும். வடக்கு வீதியில் பிள்ளையார் கோவில், ரத்தினபுரீஸ்வரர் கோவில், குருகுல சஞ்சீவி கோவில் ஆகிய கோவில்களில் நின்று செல்லும்.
தேங்காய், பழம் படையல்
கீழராஜவீதியில் கொடிமரத்து மூலை விட்டோபா கோவில், மணிகர்ணிகேஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில் ஆகிய இடங்களிலும், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கனரா வங்கி அருகே உள்ள பிள்ளையார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காளியம்மன் கோவில் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் வசதிக்காகவும், சாமி தரிசனத்திற்காகவும், தேங்காய் பழம் படைப்பதற்காகவும் தேர் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது தஞ்சை மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் அரவிந்தன், மாதவன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியா ரேணுகோபால், மேற்பார்வையாளர்கள் ரெங்கராஜன், சங்கர், தாசில்தார் மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story