சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள 39 தீர்மானங்கள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள 39 தீர்மானங்கள், விவாதத்துக்கு பின்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் சொத்து வரி குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் கேட்க அனுமதியும் தீர்மானம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
39 தீர்மானங்கள்
பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று மதியம் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது. இந்த விவாதத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கவுன்சிலர்களின் பெயர்களை துணை மேயர் மு.மகேஷ்குமார் கூப்பிட அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதன் பின்னர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள், மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து 39 தீர்மானங்கள் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டன. இந்த தீர்மானங்களை மேயர் ஆர்.பிரியா தெரிவிக்க மன்ற உறுப்பினர்கள் ஆம் அல்லது இல்லை என தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஒரு மனதாக நிறைவேற்றம்
இந்த தீர்மானங்களின் நகல்கள் அனைத்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து மேயர் ஆர்.பிரியா தீர்மானத்தின் கருப்பொருளை வாசித்தார். அதற்கு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆம் என மேசைகளை தட்டி தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து 39 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
இதில் தீர்மானம் எண்-24 பொருள் குறித்து மேயர் ஆர்.பிரியா தெரிவித்தபோது, மாமன்ற உறுப்பினர் கயல்விழி (வார்டு179) பேசுவதற்கு அனுமதி கேட்டார். இதையடுத்து உறுப்பினரை பேச மேயர் அனுமதி அளித்தார். அப்போது உறுப்பினர் கயல்விழி பேசுகையில், ‘தீர்மானம் 24-ல், 16-வது வார்டு பகுதியில் உள்ள வாண்டிப்பாதை 50 சென்ட் நிலத்தில் திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க அந்த வார்டு கவுன்சிலர் அனுமதி வழங்கியுள்ளார்.
எனது வார்டிலும் ‘பிளாக்-58’ பகுதியில் வண்டிப்பாதை உள்ளது. இந்த பாதை தற்போது மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இருக்கிறது. எனவே அந்த பாதையை வண்டிப்பாதையாக கருதி தேவையான பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்‘, என்றார். இதற்கு பதில் அளித்த மேயர் ஆர்.பிரியா, இந்த கருத்து பரிசீலிக்கப்படும் என்றார்.
சொத்து வரி
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில் நேற்று 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வருவாய்துறையின் சொத்து வரி பொது சீராய்வு அரசாணை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் அல்லது ஆட்சேபனைகள் பெற அறிவிப்புகள் வெளியிட அனுமதி அளிக்க தீர்மானம் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. இந்த தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story