கிரிவலப்பாதையில் 2 ஆயிரம் பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி


கிரிவலப்பாதையில் 2 ஆயிரம் பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி
x
தினத்தந்தி 10 April 2022 8:14 PM IST (Updated: 10 April 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 2 ஆயிரம் பணியாளர்கள் இணைந்து மாபெரும் தூய்மைப்பணி இயக்கத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 2 ஆயிரம் பணியாளர்கள் இணைந்து மாபெரும் தூய்மைப்பணி இயக்கத்தில் ஈடுபட்டனர்.

மாபெரும் தூய்மை பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் ஒன்றாகும். சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வருகிற 15-ந் தேதி நள்ளிரவு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி நள்ளிரவு முடிவடைகிறது.

 கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

 இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காக முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் பேரில் இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மாபெரும் தூய்மை பணி நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இருந்து இந்த பணி தொடங்கப்பட்டது. 

இதனை கலெக்டர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்து தூய்மை பணியில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர். இப்பணியானது கோவில் மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை முழுவதும் நடைபெற்றது. இந்த பணிகளை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

நிகழ்ச்சியில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன், கார்த்திவேல்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்துகிற பணியில் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த குழுக்களில் 240 அரசு தூய்மைப் பணியாளர்களும், தூய்மை அருணை இயக்கம், ரீகன் போக் தொண்டு நிறுவனம், இளம் தளிர் இயக்கம், சாந்தி மலை டிரஸ்ட் உள்ளிட்ட தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மூலம் கிரிவல பாதையில் போர்கால அடிப்படையில் துய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர் போன்ற பொருட்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்ற சட்டம் இருப்பதை அறிந்து, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், பக்தர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். 

மாவட்ட அளவில் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்- அமைச்சரின் மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பை, துணி பைகளில் காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு முன்வர வேண்டும். 

சித்ரா பவுர்ணமி சமயத்தில் திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

2 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கு ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 70 நிறுவனங்கள் அன்னதானத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

  மேலும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக எல்லா மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் உள்பட 6 ஆயிரம் பஸ் வசதியும், ரெயில் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story