குருத்தோலைகளை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி


குருத்தோலைகளை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
x
தினத்தந்தி 10 April 2022 8:14 PM IST (Updated: 10 April 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்றனர்.


திண்டுக்கல்:

குருத்தோலை ஞாயிறு
ஏசுவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மார்ச் 2-ம் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.
தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, இந்த நாளில் ஏசு கிறிஸ்து தனது சீடர்களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது மக்கள் ஆலிவ் மரக்கிளைகளை கையில் ஏந்தி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய கிறிஸ்தவர்கள் சங்கம்
அதன்படி  திண்டுக்கல் ஐக்கிய கிறிஸ்தவர்கள் சங்கம் சார்பில் குருத்தோலை பவனி மற்றும் தொடக்க ஜெப கூட்டம் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் இன்று நடந்தது. இதையொட்டி நடைபெற்ற தொடக்க ஜெப கூட்டத்திற்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கி குருத்து ஞாயிறு செய்தி வழங்கினார். அதன்பிறகு குருத்தோலையை அர்ச்சித்தார். திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய சேர்மன் ஸ்டான்லி ஜெயராஜ் தொடக்க ஜெபம் செய்தார். திண்டுக்கல் டி.இ.எல்.சி. திருத்துவநாதர் தேவாலய போதகர் சுரேஷ்பாபு நற்செய்தி வாசகத்தை வாசித்தார். அதன்பிறகு குருத்தோலை பவனி தொடங்கியது. இந்த பவனி நகரின் முக்கிய சாலைகளில் வலம் வந்து அந்தந்த தேவாலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடல்களை பாடி வலம் வந்தனர். அதேபோல் மேட்டுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் குருத்தோலை பவனி நடந்தது.
கொடைக்கானல்
கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது. கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள கே.சி.எஸ்.திடல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைவட்ட அதிபர் எட்வின் சகாயராஜ் கலந்துகொண்டு பவனியை தொடங்கி வைத்தார். இதில் நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களின் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் குருத்தோலைகளை ஏந்தி ஓசன்னா பாடலை பாடியவாறு சென்றனர். இதில் ஒரு குழுவினர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தனர். இதேபோல் மற்றவர்கள் ஆங்காங்கு உள்ள ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.
செந்துறை
செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, பிரிட்டோ ஆகியோர் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கொசவப்பட்டி
சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டியில் குருத்தோலை ஞாயிறு விழா புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் நடந்தது. இதையடுத்து வட்டார அதிபர்கள் அந்தோணி, டேவிட் செபாஸ்டின் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனியாக ஆலயம் வந்தனர். அங்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.



Next Story