‘பிட்காயின்’ முறைகேடு குறித்து அமெரிக்க அமைப்பு விசாரணையா?;சி.பி.ஐ. விளக்கம்
கர்நாடகத்தில் நடந்த ‘பிட்காயின்’ முறைகேடு குறித்து அமெரிக்க அமைப்பு விசாரணை நடத்துகிறதா? என்பதற்கு சி.பி.ஐ. விளக்கம் அளித்து உள்ளது.
பெங்களூரு:
‘பிட்காயின்’ முறைகேடு
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பிட்காயின்’ முறைகேடு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்கிற ஸ்ரீகி இந்த பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. வெளிநாட்டு நிறுவனங்களின் இணையதளத்தை முடக்கும் ஸ்ரீகிருஷ்ணா அதை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் பெற்றதும் தெரியவந்தது. மேலும் அவர் கர்நாடக அரசின் இணையதளத்தையும் முடக்கி பல கோடி இழப்பு ஏற்படுத்தி இருந்ததும் தெரிந்தது.
‘பிட்காயின்’ முறைகேட்டில் பா.ஜனதாவினருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறி இருந்தது. பதிலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் தான் ‘பிட்காயின்’ முறைகேட்டில் ஈடுபடுவதாக பா.ஜனதா கூறியது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகத்தில் நடந்த ‘பிட்காயின்’ முறைேடு குறித்து விசாரிக்க அமெரிக்காவை சேர்ந்த எப்.பி.ஐ. என்ற அமைப்பு டெல்லிக்கு வந்து இருப்பதாக நான் நினைக்கிறேன்.
அடிப்படை ஆதாரமற்றது
அந்த அமைப்பு முழு முனைப்புடன் விசாரித்தால் பா.ஜனதாவின் பல எலும்புக்கூடுகள் தகர்ந்து விடும்’ என்று கூறி இருந்தார். இதுபோல ‘பிட்காயின்’ முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சில கேள்விகளை எழுப்பிய கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவும் கர்நாடகத்தில் நடந்த ‘பிட்காயின்’ முறைகேடு குறித்து விசாரிக்க அமெரிக்க அமைப்பு இந்தியா வந்து உள்ளதா? என்று கூற வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த நிலையில் ‘பிட்காயின்’ முறைகேடு குறித்து அமொிக்க அமைப்பு விசாரணை நடத்துகிறதா? என்பதற்கு மத்திய அரசின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ. விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நடந்த ‘பிட்காயின்’ முறைகேடு குறித்து விசாரிக்க அமெரிக்காவை சேர்ந்த எப்.பி.ஐ. என்ற விசாரணை அமைப்பு இந்தியாவுக்கு வரவில்லை. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம், எப்.பி.ஐ. எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அந்த அமைப்பு இந்தியா வருவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. இந்தியாவில் உள்ள தகுதிவாய்ந்த ஆணைய விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழவில்லை. இந்தியாவில் உள்ள இண்டர்போலுடன் சி.பி.ஐ, எப்.பி.ஐ. நெருக்கமாக இருக்கிறது.
இவ்வாறு சி.பி.ஐ. கூறியுள்ளது.
Related Tags :
Next Story