மூலவைகை ஆற்றில் நீர்வரத்து


மூலவைகை ஆற்றில் நீர்வரத்து
x
தினத்தந்தி 10 April 2022 9:41 PM IST (Updated: 10 April 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது.

கடமலைக்குண்டு: 

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூலவைகை ஆறு வறண்டது. மேலும் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. 

இந்த சூழ்நிலையில் கடந்த 2 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று காலை மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. நேற்று காலை           வருசநாடு கிராமத்தை கடந்த நீர்வரத்து மாலை கடமலைக்குண்டுவை வந்தடைந்தது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

தற்போது மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் முழுமையாக நீங்கியது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story