கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்
பெங்களூரு: கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
அரசின் சேவைகள்
சீதாராம கல்யாண நிகழ்ச்சி விஜயநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
வளர்ச்சியில் பெண்கள் பங்கு கொள்ள வேண்டும். வறுமையில் உள்ள பெண்களை முன்னேற்றம் அடைய செய்யும் நோக்கத்தில் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் மாநில அரசின் வருவாயும் அதிகரிக்கும். கிராம பஞ்சாயத்துகளில் கிராம ஒன் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருகிறது.
டீசல் மானியம்
வருவாய் நில ஆவணங்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் அரசாணை பிறப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைத்து திட்ட பணிகளும் மே மாதம் முதல் தொடங்கப்படும். ஏழை மக்களுக்காக 9 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்க டீசல் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளேன். 33 லட்சம் விவசாயிகளுக்கு பூஜ்ஜிய வட்டியில் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்க வங்கி வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த சுயஉதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி செய்ய ரூ.500 கோடி ஒதுக்கப்படும். இதனால் 4 லட்சம் பெண்கள் பயன் அடைவார்கள்.
மக்கள் நிராகரித்தனர்
கர்நாடகத்தில் காங்கிரசின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை மக்கள் ஏற்கனவே பார்த்துவிட்டனர். அனைத்து பாக்கிய திட்டங்களையும் செயல்படுத்தினர். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்தனர். 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த விழாவில் போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு, சித்தேஸ்வர் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story