42 போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்பணி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 42 போலீஸ் நிலையங்களிலும் தூய்மைப்பணி நடைபெற்றது.
விழுப்புரம்,
மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தமிழக காவல்துறையினர், தூய்மை தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் நிலையங்களில் தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையங்கள், 4 மகளிர் போலீஸ் நிலையங்கள், 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் என 42 போலீஸ் நிலையங்களிலும் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது.
இதையொட்டி போலீஸ் நிலையத்தின் ஒவ்வொரு அறைகளையும் சுத்தம் செய்ததோடு போலீஸ் நிலைய வளாகம், சுற்றியுள்ள இடங்களிலும் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து அலுவலக முக்கிய கோப்புகளையும் சரிபார்த்து முறையாக அடுக்கி வைத்தனர். இப்பணிகளை முடித்ததும் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.விழுப்புரம் நகரம் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் நடந்த இந்த தூய்மைப்பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story