நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். நந்தகுமார் எம்.எல்.ஏ.  திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 10 April 2022 10:33 PM IST (Updated: 10 April 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு, சோழவரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

அணைக்கட்டு

அணைக்கட்டு போலீஸ் நிலையம் பின்புறத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதேபோன்று ஒடுகத்தூர் பகுதியிலும் நேரடி கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு. பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், சுதாகரன், அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் குமார பாண்டியன், வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் சாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் ராஜா வரவேற்று பேசினார். 

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கி, நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்து பேசினார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அணைக்கட்டு தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளேன். இந்த நிலையத்தில் விவசாயிகள் பயிரிடும் நெல்லை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம் என்றார். நிகழ்சியில் துணை மண்டல மேலாளர் விஜயகுமார், அணைக்கட்டு நேரடி கொள்முதல் நிலைய அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று கணியம்பாடியை அடுத்த சோழவரம் கிராமத்தில் நடந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவுக்கு கணியம்பாடி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் திவ்யா கமல் பிரசாத், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார் வரவேற்றார். 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து சோழவரம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட கவுன்சிலர் த.பாபு, பேரூராட்சி செயலாளர் காசி குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story