கள்ளக்காதலியுடன் வாழ்வதற்கு இறந்துவிட்டதாக நாடகமாடிய வாலிபர்
கள்ளக்காதலியுடன் வாழ்வதற்கு இறந்துவிட்டதாக நாடகமாடிய வாலிபர் உளுந்தூர்பேட்டையில் சிக்கினார்.
உளுந்தூர்பேட்டை
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் கடலில் மீன்பிடித்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் கடற்கரைக்கு சென்று தேடினார்கள். அங்கு அந்த வாலிபரின் உடைகள், காலணி, மோட்டார் சைக்கிள் கிடந்தது. இதனால் அந்த வாலிபர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று நினைத்தனர்.
இதற்கிடையே மற்றொரு கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவரையும் காணவில்லை. மேலும் இறந்ததாக கருதப்படும் வாலிபரின் வீட்டின் முன்பு இருந்த கார் சமீபத்தில் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் குறித்து இரு குடும்பத்தினரும் உவரி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டு போன கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இறந்ததாக கருதப்பட்ட வாலிபரும், மாயமான இளம்பெண்ணும் ஒன்றாக வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, கள்ளக்காதலியான இளம்பெண்ணுடன் வாழ்வதற்காக அந்த வாலிபர் இறந்துவிட்டதாக நாடகம் ஆடியதும், அவர்கள் ஊர் சுற்றுவதற்காக காரை அந்த வாலிபர் திருடி சென்றதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் உவரிக்கு அழைத்து வந்தனர். 2 பேரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story