மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்


மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 11 April 2022 12:35 AM IST (Updated: 11 April 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

அச்சுத்தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்பாடுக்குள் கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகாசி, 
அச்சுத்தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்பாடுக்குள் கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
ஆலோசனை கூட்டம் 
பாட்டாளி மக்கள் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல்சாமி, மத்திய மாவட்ட துணைச் செயலாளர் செல்வன், மேற்கு மாவட்ட தலைவர் ராமராஜ், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிவகாசி மாநகர வடக்கு செயலாளர் கணேஷ்பிரபு வரவேற்றார். இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, தேனி, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி, திருப்பூர், கரூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
அச்சுத்தொழில் பாதிப்பு 
கொரோனாவிற்கு பின்னர் காகித உற்பத்தி பாதிப்பாலும், இறக்குமதி இல்லாமல் போனதாலும் காகித விலையேற்றம் இருமடங்காகி உள்ளது. மற்ற மூலப்பொருட்களின் விலையும் 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அச்சு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. காகிதத்தாளின் விலை அச்சுத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சிவகாசி மாநகராட்சி ஆகிவிட்ட போதும், திருத்தங்கல் ஊர் எல்லையில் குப்பைகள் மலைப்போல் கொட்டி தீ வைக்கப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க குப்பை மேலாண்மையில் சிவகாசி மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சிவகாசி மாநகர தெற்கு செயலாளர் வைரவேல் நன்றி கூறினார்.
திறப்பு விழா 
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா  சிவகாசியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கலந்து கொண்டு அலுவலகத்தைதிறந்து வைத்தார். விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல்ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story