தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தால் குடிப்பதற்கு குடிநீர் அங்கு இல்லை. இதனால் அவர்கள் கடைகளில் காசு கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி குடிக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஏழை-எளிய மக்களால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவர்கள் தாகத்துடனே வீட்டிற்கு செல்கின்றனர். கோடை காலமும் தொடங்க இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் போதிய அளவு குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேர் வரும் வீதி நெடுகிலும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சாலையின் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நொய்யல், கரூர்.
எரியாத உயர் கோபுர மின் விளக்கு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மாங்காடு நுழைவுவாயில் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கோபுரம் அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக மின் விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளதால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மாங்காடு, புதுக்கோட்டை.
பயனற்ற பொதுகழிவறை
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி 2-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக பொதுகழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை பராமரிப்பு இன்றி புதர்மண்டியும், தண்ணீர் வசதி இன்றியும் பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புஞ்சை தோட்டக்குறிச்சி, கரூர்.
சாலையில் பள்ளம்
திருச்சி பறவைகள் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அங்கு பள்ளம் இருப்பதற்கு அடையாளமாக செடியை உடைத்து சாலையில் நட்டுள்ளனர். எனவே பெரிய அளவிலான விபத்து நடைபெறும் முன் இந்த பள்ளத்தை சரிசெய்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் இனாம்புலியூர் ஊராட்சி முதல் ஆர்ச்சம்பட்டி இணைப்புச் சாலை வரை தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019- 20 -ம் ஆண்டு இந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற இருந்தது. நீண்ட நாட்களாக சாலை சீரமைக்காமல் தற்போது அந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. சாலை சீரமைக்க பணி தொடங்கி 3 மாதமாகியும் இன்னும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி உடையான்பட்டி- ஓலையூர் சாலையோரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு அதற்கு பதில் புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உடையான்பட்டி, திருச்சி.
போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி பெரியமிளகுபாறை, காமராஜபுரம், பொன்னகர், செல்வநகர், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. மேலும் அவை சாலையின் நடுவே படுத்துக்கொள்வதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
Related Tags :
Next Story