கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு
கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு வழிபாடு
கும்பகோணம் காமராஜர் ரோட்டில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நேற்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் முதன்மை குரு அமிர்தசாமி, பங்குத்தந்தை தேவதாஸ், உதவி பங்குத்தந்தை மனோஜ், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த குருத்தோலை பவனி ஆலயத்திலிருந்து அகுஸ்தினார் பள்ளி வழியாக காமராஜர் ரோட்டிற்கு சென்று பின்னர் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இந்த பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தூயதோமா-கிறிஸ்துநாதர் ஆலயம்
இதேபோல் கும்பகோணம் தென்னிந்திய திருச்சபை தூயதோமா-கிறிஸ்துநாதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி வழிபாடு சபை குரு ஜெரின் செஸ்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த பவனியில் திருச்சபை மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ஓசன்னா பாடுவோம் என்ற பாடலை பாடியபடி கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பொருளாளர் ஆர்பர்ட், செயலாளர் ஸ்ரீராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.
லுத்ரன் திருச்சபை
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ் சுவிசேச லுத்ரன் திருச்சபையில் குருத்தோலை ஞாயிறையொட்டி வழிபாடு நடைபெற்றது. இந்த பவனியில் சபையின் குரு ஜான்சன் சாமுவேல் தலைமையில் திரளான சபை மக்கள் குருத்தோலைகளை ஏந்திய படி பாடல்களை பாடியபடி கலந்து கொண்டனர். இதேபோல் கும்பகோணத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பெந்த கொஸ்தே திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பாபநாசம்
பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. இதில் செல்வராஜ் அருள்நாதன் கலந்துகொண்டு புனித செபஸ்தியார் கொடியை ஏற்றினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையில் ஏந்தியவாறு சென்றனர். பவனியில் பாபாநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பங்குதந்தை கொஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பேராவூரணி
பேராவூரணி தாலுகா ஆதனூர் புனித அன்னாள் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. அப்போது தேவாலய பங்குத்தந்தை லூர்துசாமி குருத்தோலைகளை புனிதம் செய்தார். பின்னர் குருத்தோலை பவனி தொடங்கியது.
அனைவரும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி, கிறிஸ்தவ பாடல்கள் பாடியபடி, கிராமத்தின் முக்கிய வீதிகளில் பவனி வந்தனர்.
Related Tags :
Next Story