காகித விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அச்சக உரிமையாளர்கள்
கொரோனா தொற்றால் அச்சக் தொழில் நலிவுற்றுள்ள நிலையில் காகித விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி:
கொரோனா தொற்றால் அச்சக் தொழில் நலிவுற்றுள்ள நிலையில் காகித விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
அச்சக தொழில் நலிவு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆப்செட் பிரின்டர்ஸ் சங்கத் தலைவர் அருள்ராஜ், செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அச்சக தொழில் நலிவடைந்து உள்ளது. இதனால் அச்சக உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். காகிதத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒருடன் ரூ.36 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்பனையான காகிதம் தற்போது ஒரு டன் ரூ.42 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. செய்தித்தாள் காகிதம், கோட்டட் பேப்பர், ஆர்ட் பேப்பர், கிராப்ட் பேப்பர், பைண்டிங் அட்டை போன்றவையும் 150 முதல் 200 சதவீதம் விலை உயர்ந்து உள்ளது. இதனால் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகம், திருமண அழைப்பிதழ் மற்றும் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தும் காகிதங்கள் விலையும் அதிகரித்து உள்ளது. அதே போன்று பள்ளி, கல்லூரிகள் முழுநேரமும் செயல்படுவதால் காகிதம் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் அரசு தலையிட்டு காகிதங்கள் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, அச்சகங்களும், அதனை சார்ந்த துறைகளும் நலிவடையாமல் மீண்டெழ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
அங்கன்வாடி
விளாத்திகுளம் தாலுகா வள்ளிநாயகபுரம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், வள்ளிநாயகபுரம் பஞ்சாயத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கனவே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. உடனடியாக பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்கம் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் சுமார் 25 லட்சம் சலவை தொழிலாளர்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 41 சாதிகள் உள்ளன. இதில் வசதிபடைத்த சமுதாயங்களும் உள்ளன. வண்ணார் சமுதாயமும் அதே பட்டியலில் உள்ளதால் அரசின் நலத்திட்டங்கள் பெற முடியவில்லை. ஆகையால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சலவைத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர் குடும்பத்தில் படித்த இளைஞர்கள குறைந்தபட்சம் 10 பேரை தேர்வு செய்து, அரசு செலவில் ஐ.ஏ.எஸ் பயிற்சி நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறி உள்ளார்.
தடுப்பணை
தமிழ் தேச தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஆழ்வார்திருநகரி பகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி- ஆழ்வார்தோப்பு இடையே தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உயர் மட்ட பாலத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தடுப்பனண அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்காக ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்ட இடத்தில் தடுப்பணை அமைக்காமல் உயர்மட்ட பாலத்துக்கு அருகிலேயே தடுப்பணையை அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் மழை வெள்ள காலத்தில் தடுப்பணை அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்திலேயே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசனத்துக்க உட்பட்ட மருதூர் மேலக்கால், கீழக்கால், தென்கால், வடகால் பாசனத்துக்கு உட்பட்ட வயல்களுக்கு தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் உள்ள 53 குளங்களில் இருந்துதான் தண்ணீர் கிடைக்கிறது. ஆகையால் இந்த குளங்களை கோடைகாலத்தில் தூர்வாரி ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தியும், மழைக்காலங்களில் தண்ணீர் சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
கூட்டுறவு சங்கத்தில் மோசடி
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் 4-வது வார்டு கவுன்சிலர் தனேஷ் கொடுத்த மனுவில், பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கூட்டு பொறுப்புக்குழுவில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து உள்ளது. அந்த குழுவில் பலர் மாவட்ட துணைபதிவாளரை நேரில் சந்தித்து புகார் கூறி உள்ளனர். இதனால் குழுவின் 18 பேருக்கு மட்டும் அவர்களது சேமிப்பு கணக்கில் தலா ரூ.1 லட்சம் செலுத்தி உள்ளனர். மற்றவர்களுக்கு எந்த ஒரு தொகையும் கொடுக்கப்படவில்லை. ஆகையால் உரிய விசாரணை நடத்தப்பட்டு உரிய நபர்களுக்கு மோசடி செய்யப்பட்ட தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story