சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்தார்.
மங்களூரு:
உச்சிலா மகாலட்சுமி கோவில்
உடுப்பி மாவட்டம் காபு தாலுகாவில் உச்சிலா மகாலட்சுமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கோவிலில் நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் உச்சிலா மகாலட்சுமி கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வன்முறையை கையில் எடுப்பதை அரசு பொருத்துக் கொள்ளாது. சட்டம்-ஒழுங்கு காக்கப்பட வேண்டும். அதையும் மீறி யாராவது சட்ட ஒழுங்கை மதிக்காமல் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தெளிவான அறிக்கை
அரசியல் அமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது தான் இந்த அரசு. நாங்கள் சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக உணர்வோடு செயல்பட்டு வருகிறோம். ஒருவரின் எண்ணங்களுக்கு எதிராக எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நாங்கள் எக்காரணம் கொண்டும் பொறுத்துகொள்ள முடியாது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தெளிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஹிஜாப் என்ற ஒரு பிரச்சினை தலை தூக்கியது. முந்தைய அரசுகளால் இது சம்பந்தமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதையும் நாங்கள் உருவாக்கவில்லை. என்னுடைய செயல்கள் அனைத்தும் சரியாக தான் இருக்கும். அமைதியான மாநிலம் என்று கர்நாடகத்திற்கு பெயர் உள்ளது. இந்த மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் செயலில் காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story