மாவோயிஸ்டு தம்பதி கோர்ட்டில் ஆஜர்


மாவோயிஸ்டு தம்பதி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 11 April 2022 9:49 PM IST (Updated: 11 April 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

மாவோயிஸ்டு தம்பதி கோர்ட்டில் ஆஜர்

திருப்பூர், 
போலி ஆவணங்கள் மூலமாக சிம்கார்டுகள் பெற்ற வழக்கு தொடர்பாக மாவோயிஸ்டு தம்பதி நேற்று திருப்பூர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வருகிற ஜூன் மாதம் முதல் சனிக்கிழமை தோறும் விசாரணை நடக்கிறது.
மாவோயிஸ்டு தம்பதி
திருப்பூர் மாநகரில் போலி ஆவணங்களை கொண்டு சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்திய வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தம்பதியான ரூபேஷ்-சைனி ஆகியோர் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்கும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்கும், தெற்கு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் என 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சைனி ஜாமீனில் உள்ளார். ரூபேஷ் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீதான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திருவனந்தபுரம் சிறையில் இருந்து ரூபேசை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். சைனியும் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 11-ந் தேதி நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.
சனிக்கிழமை தோறும் விசாரணை
இதுகுறித்து வக்கீல் கனகசபாபதி கூறும்போது, ‘ஐகோர்ட்டில் சிறப்பு அனுமதியை பெற்று இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் முதல் சனிக்கிழமைதோறும் நடைபெற இருக்கிறது. முதலாவதாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணை தொடங்க இருக்கிறது’ என்றார்.

Next Story