நாகை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்துவரி உயர்வை கண்டித்து நாகை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிப்பாளையம்:
சொத்துவரி உயர்வை கண்டித்து நாகை நகர்மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகர்மன்ற கூட்டம்
நாகை நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
செந்தில்குமார் ( துணைத்தலைவர்):- இஸ்லாமியர்கள் நலன் கருதி ரமலான் நோன்பு கஞ்சிக்கு ரூ.6 ஆயிரம்டன் அரிசி வழங்கிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பரணிகுமார்(அ.தி.மு.க.):- நாகூர் வெட்டாற்று பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அனைத்து வாகனங்களும் நாகை நகர பகுதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றாா். இதை தொடர்ந்து மற்ற 4 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முகமதுநத்தர்(காங்கிரஸ்):- நாகை புதிய பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற நேரு மேடை இருந்தது. பஸ்நிலைய விரிவாக்கத்தின் போது அந்த மேடை இடிக்கப்பட்டது. மீண்டும் அந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அல்லது மேடை அமைத்து தர வேண்டும்.
மாரிமுத்து(தலைவர்):- மேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுமனைப்பட்டா
செந்தில்குமார் (துணைத்தலைவர்):- நாகூர் வண்டிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 72 குடும்பங்களுக்கு பட்டாவை முன்னாள் அமைச்சர் வழங்கி உள்ளார். விடுபட்டவர்களுக்கு தி.மு.க ஆட்சியில் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்க வேணடும் என்ற நோக்கில் பதிவுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்த போது ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா உரிய ஆவணத்தில் ஏற்றவில்லை என்பது தெரியவந்தது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார்.
வருமானம் அதிகரிக்கும்
பதுருனிசா(தி.மு.க.):- நாகூர் பகுதியில் பெரும்பாலான வீடுகளை லாட்ஜ் போல் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இருக்கும் லாட்ஜ்கள் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது. எனவே நகராட்சி சார்பில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் நகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 31 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story