சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்துவதால் குறைந்த அளவிலான மக்களே மனு அளிக்க வந்தனர்.
இதில் பல்வேறு உதவித்தொகை, சாதி சான்று, வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
மேலும் கடந்த கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
செங்கம் தாலுகா முன்னூர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், தொழிலாளி. அவரது மனைவி ராஜகுமாரி மற்றும் 5 வயது மகள் விவேகாவுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு திடீரென அவர் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மனைவி, மகள் மீதும் ஊற்றினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது வெங்கடேசன் கூறுகையில், செங்கம் தேக்கவாடியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1½ லட்சத்தை அவசர தேவைக்காக எனது சொத்தை அடமானமாக எழுதி கொடுத்து பெற்றேன். பின்னர் 14 மாதத்திற்குள் ரூ.2 லட்சத்தை அந்த நபரிடம் வழங்கினேன்.
பின்னர் எனது சொத்தை திருப்பி எனது பெயரில் எழுதி கொடு என்று கேட்டால் காலதாமதம் செய்து வருகிறார். மேலும் அவரது தூண்டுதலின் பேரில் சிலர் எனது சொத்தை அபகரிக்கும் நோக்கில் எனக்கும், எனது மனைவி, குழந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே எனது சொத்தை அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்றார். இதையடுத்து போலீசார் அவர்களை அதிகாரிகளிடம் மனு அளிக்க குறைதீர்வு கூட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
பாரம்பரிய நடனம்
தண்டராம்பட்டு அருகில் உள்ள கோந்தம்பட்டு, சாத்தனூர், தரடாப்பட்டு, கீழ்வணக்கம்பாடி, முத்தனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த குருமன்ஸ் இன பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறோம்.
கோந்தம்பட்டு, சாத்தனூர், தரடாப்பட்டு, கீழ்வணக்கம்பாடி, முத்தனூர் ஆகிய பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு பழங்குடினர் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை மனு அளித்துள்ளோம். எனவே எங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அவர்களது பாரம்பரிய நடனமாடி பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story