பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அன்னவாசல்:
முத்துமாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 22-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 3-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் முத்துமாரியம்மன் அன்னம், ரிஷப, குதிரை, சிம்மம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு சாமி வேடமிட்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
சிறப்பு அபிஷேகம் 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக அன்னவாசல், கீரனூர், நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
இதைதொடர்ந்து மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக வீதியில் பவனி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், அன்னவாசல் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் கல்யாணி மாரிமுத்து, நார்த்தாமலை ஊராட்சி மன்ற தலைவர் வேலு, சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முத்துக்கருப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், வேலு, மேலாளர் கணேசன், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், மண்டகப்படிதாரர்கள், ஊர் பொதுமக்கள், ஒன்றிய அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின் பேரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தீர்த்தவாரி நிகழ்ச்சி 
இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக முத்துமாரியம்மன் காலையில் கோவிலில் எழுந்தருளி அங்கிருந்து ஊர்வலமாக ஆகாச ஊரணிக்கு வந்து சேருகிறார். 
தொடர்ந்து அங்கு அம்மனுக்கு காப்பு கலைத்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பங்குனி திருவிழா நிறைவுபெற உள்ளது.
போக்குவரத்து கடும் பாதிப்பு;சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டத்தை காண மாவட்டம் முழுவதும் இருந்தும், திருச்சி உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் நார்த்தாமலையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாக நிரம்பி காணப்பட்டது. இதற்கிடையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசியநெடுஞ்சாலையில் நார்த்தாமலை கோவில் நுழைவு வாயில் அருகில் இருந்து சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகனங்கள் சாலையில் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற பஸ்கள், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. பகல் 1 மணி அளவில் தொடங்கிய போக்குவரத்து பாதிப்பு நேற்று மாலை தேரோட்டம் முடிந்த பின்பும் நீடித்தது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் கூடுதலாக திட்டமிட்டு இருந்தால் இந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்காது என பக்தர்கள் பேசிக்கொண்டனர். இந்த போக்குவரத்து நெரிசலில் கலெக்டர் கவிதாராமு வந்த வாகனமும், 108 ஆம்புலன்சும் சிக்கிக்கொண்டது. அதன்பின் போக்குவரத்து சற்று ஒழுங்குபடுத்திய பின் கலெக்டர் கார், 108 ஆம்புலன்சு சென்றது.
2 ஆண்டுகளுக்கு பிறகு அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு திருவிழா நடைபெறவில்லை. கடந்த 2021-ம் ஆண்டும் கொரோனா ஊரடங்கால் திருவிழா நடைபெறாமல், தேரோட்டம் மட்டும் திடீரென நடைபெற்றது. இதனால் பக்தர்கள் அதிக அளவில் அப்போது கோவிலுக்கு வரமுடியவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று வருகை தந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் தேரோட்டத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
மலையின் உச்சியில் ஆபத்தான வேடிக்கை
தேரோட்டத்தை காணவந்த பக்தர்கள் சிலர், இளைஞர்கள், இளம்பெண்கள் கோவில் அருகே உள்ள மலையின் உச்சியின் மேல் ஏறி நின்று வேடிக்கை பார்த்தனர். மலையின் உச்சியில் செல்வதற்கு சரியான பாதைகள் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் பாறையில் ஏறி மலை உச்சிக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்கல்
தேரோட்டத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு நார்த்தாமலையில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டன. இதேபோல கீரனூரில் இருந்து நார்த்தாமலை வரையும், புதுக்கோட்டையில் இருந்து நார்த்தாமலை வரையும் சாலையின் இரு புறமும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் பக்தர்கள் பலர் அமர்ந்து சாப்பிட்டனர். இதேபோல தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர், சர்பத் வினியோகிக்கப்பட்டன.
திருவிழாவையொட்டி கீரனூா் லட்சுமி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பாக குளத்தூரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

Next Story