பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு


பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
உப்பளம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் வாலிநோக்கம் பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் பாத்திகள் உள்ளன. 
இதைத்தவிர திருப்புல்லானி, ஆணைகுடி, தேவி பட்டினம் அருகே கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல ஊர்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. அதுபோல் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி நடைபெறும் சீசன் ஆகும்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கி நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த 2 வாரங் களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்ததால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் களைகட்டி நடைபெற்றுவந்தது.
பரவலாக மழை
பாத்திகளில் இருந்து கல் உப்புகளை லாரிகள் மூலமாகவும் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதன் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. 
இதனால் திருப்புல்லாணி, ஆனைகுடி பகுதிகளில் உள்ள உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஊர்களிலும் பல பாத்திகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏமாற்றம்
சீசன் தொடங்கி ஒரு மாதம் கூட முழுமை பெறாத நிலையில் இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் அதை நம்பி வாழும் தொழிலாளர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story