சொத்துவரி உயர்வை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு


சொத்துவரி உயர்வை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:27 PM IST (Updated: 11 April 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவசர கூட்டம்
பரமக்குடி நகராட்சி சிறப்பு கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நகர் மன்ற அரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அய்யனார் அனைவரையும் வரவேற்றார்.
 கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா. கவுன்சிலர்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்திருந்தனர். தொடர்ந்து கூட்டத்தில் 1.4.2022 முதல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., கவுன்சிலர்கள் வடமலையான், ஜெய்சங்கர், சிகாமணி, உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து வெளியே வந்தனர். 
பதாகைகள்
பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு கையில் பதாகைகளை ஏந்தியபடி சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு நகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் பற்றிய விவரம் வருமாறு:-
அப்துல்மாலிக்: நகராட்சி அவசரக் கூட்டத்தில் அலுவலகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தீர்மா னங்கள் தான் வந்துள்ளது. கவுன்சிலர்களின் கோரிக்கைகள் எதுவும் வரவில்லை.
தலைவர் சேது கருணாநிதி: அடுத்து வரும் சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் வரும். சதீஷ்குமார்: நகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் உள்ளது. ஆனால் அதில் பெயர், முகவரி மாற்றம் செய்ய முடியவில்லை. வேறு எதற்கு அந்த அலுவலகம் இயங்குகிறது.
சிரமம்
ஆணையாளர்:அது சம்பந்தமாக தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தான் மாற்ற வேண்டும். கிருஷ்ணவேணி : 34 வது வார்டில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும். பொழுது போக்கு அம்சம் இல்லாமல் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தலைவர் சேது கருணாநிதி:நகராட்சிக்கு சொந்தமான இடம் இருந்தால் பூங்கா அமைக்கலாம். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தப் பட்டு உள்ளன. அவைகளை அப்புறப்படுத்தி அப்பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படும்.
மாரியம்மாள் : நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த வார்டுகளில் தனித்தனியாக நகர்மன்ற உறுப்பினர்கள் அறை கட்டித்தர வேண்டும் என கடந்த கூட்டத்தில் கூறியிருந்தேன். அது குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
மக்களின் குறை
தலைவர் :நகர்மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அலுவலகங்கள் கட்டிக் கொடுக்க முடியாது. அதற்கான நடைமுறையும் இல்லை. அருகில் உள்ள அரசு இடங்கள் அல்லது அரசு பள்ளிக்கூடங்களில் இருந்து மக்களின் குறைகளை கேட்டுக் கொள்ளலாம்.
சுகன்யா: நகர்ப்பகுதிகளில் உயர்த்தப்படும் வரி எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது?
ஆணையாளர்: கட்டமைப்பிற்கு தகுந்தார்போல் வரி விதிக்கப்பட்டுள்ளது.திருமண மகால்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகிட்டு, ஜீவரத்தினம், பாக்கியராஜ், பாக்கியம் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

Next Story