மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 April 2022 11:42 PM IST (Updated: 11 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

தாமரைக்குளம்
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம், நகைக்கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்ட தூத்தூர் கிராம மக்கள் அளித்த மனுவில், கொள்ளிடம் ஆறு  20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் நடைபெறுகிறது. 
இந்நிலையில் தூத்தூர் கிராமத்தில் மணல் குவாரி அமைத்தால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலத்தடி நீர்மட்டம் குறையும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு தூத்தூர் குருவாடி பகுதிகளில் மணல் குவாரி அமைக்கக்கூடாது. முன்னர் தமிழக அரசு அறிவித்தது போல் கொள்ளிடம் ஆற்றில் தூத்தூருக்கும், வாழ்க்கைக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். 
சுகாதார சீர்கேடு 
உடையார்பாளையம் தாலுகா எரவாங்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதேபோன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தில் அரியலூர் மாவட்டத்தில் தங்களது கிராமத்தையும் சேர்த்து அரசிதழில் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என எரவாங்குடி கிராம மக்கள் மனு அளித்தனர். 
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா மருவத்தூர் கிராமத்தில் காசாம் பள்ளம் என்ற குளம் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்குளத்தில் பாசி மற்றும் களைச் செடிகள் படர்ந்து ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏரியில்  குளிப்பவர்களுக்கு அரிப்பு, நமச்சல் ஆகியவை ஏற்படுகிறது. நாளடைவில் துர்நாற்றமானது காற்றின் மூலம் பரவி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே இதுகுறித்த மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருவத்தூர் கிராம மக்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
கடன் தள்ளுபடி
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, அசவீரங்குடிகாடு  கிராமத்தில் வசிக்கும் மலர்கொடி என்பவர் அளித்த மனுவில், தான் அசுரன் குடிகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கும் குறைவாக நகையை அடகு வைத்து கடன் பெற்றதாகவும், ஆனால் தன்னோடு கடன்  பெற்றவர்களுக்கு கடன்  தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், தனது பெயர் கடன் தள்ளுபடி பட்டியலில் இல்லை எனவும் மனு அளித்துள்ளார். எனவே மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்து தனது நகை கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
பரிசு
இதையடுத்து 20-வது தேசிய பாரா தடகளப்போட்டி ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவகாமி தான் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கூட்டத்தில் செந்துறை வட்டம், கழுமங்களம் கிராமத்தில் தீ விபத்தினால் உயிரிழந்த தராணி என்பவரின் வாரிசுதாரர்களிடம் முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000-க்கான காசோலையினையும், அரியலூர் மாவட்டத்தில் 2021-2022-ம் நிதி ஆண்டில் மது அருந்துவது மற்றும் அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இணையவழி வாயிலாக ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, விழிப்புணர்வு வாசக போட்டி மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 13 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000-ம், 2-ம் பரிசாக ரூ.3,000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம் என பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
பாராட்டு
தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் உரிய அறிவுறுத்தலின்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தி பல்வேறு போட்டிகளில்  வெற்றிப் பெற்ற 65 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பின்னர் அரியலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 16 முஸ்லீம் மகளிர்களுக்கு தையல் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் சுந்தரராஜன்  உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story