அரசு மருத்துவமனையில் மீண்டும் பணி வழங்கக்கோரி தொழிற்நுட்புனர்கள் மனு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் மீண்டும் பணி வழங்கக்கோரி தொழிற்நுட்புனர்கள் மனு அளித்தனர்.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 304 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் 32 பயனாளிகளுக்கு 3.99 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தங்கத்தந்தை திட்டத்தின் மூலம் கருத்தடை செய்து கொண்ட 5 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 4 பேருக்கு காதொலி கருவிகளையும், 2 பேருக்கு ஊன்றுகோலும், 3 பேருக்கு அலைபேசியும், 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிளும், ஒருவருக்கு தையல் எந்திரமும், 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி என 15 பயனாளிகளுக்கு ரூ.99 ஆயிரத்து 690 மதிப்பிலான உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையின் மூலம் 5 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதியாக 5 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலைகளையும், 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
தொழிற்நுட்புனர்கள்
இக்கூட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் தொழிற்நுட்புனர் மற்றும் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு தொழிற்நுட்புனர் பணியாளர்கள் சார்பில் லதா என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் 2010-2011-ம் ஆண்டு திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு தொழிற்நுட்புனர் என்ற படிப்பை முறையாக படித்து பயிற்சியும் பெற்றுள்ளேன். மேலும் நாங்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த பணியை மார்ச் 2022 வரை செய்து வந்தோம். தற்போது எங்களை பணி நீக்கம் செய்துவிட்டார்கள். இது சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் எனக்கும், என் போன்று பணிபுரிந்து வருபவர்களுக்கும், பணி நீக்கம் செய்த எங்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்,
பணி நீட்டிப்புடன் கூடிய பணிபாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும். மேலும் நாங்கள் படித்து பயிற்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 வருடங்கள் முடிந்துவிட்டன. நாங்கள் கொரோனா காலக்கட்டத்தில் சிறந்த முறையில் நோயாளிகளை கையாண்டு தற்போது அரசு மருத்துவமனையில் எங்கள் சேவையை சிறப்பாக செய்து வந்தோம். மேலும் எங்களை போல கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு அனைத்து விதத்திலும், தமிழக அரசு மருத்துவத்துறை எங்களுக்கு முன்னுரிமை வழங்கி வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விஷம் அருந்தியவரால் பரபரப்பு
புகழூர் தாலுகா, தென்னிலை, அவுத்திபாளையத்தை சேர்ந்தவர் நல்லசிவம். இவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதாகவும், பலமுறை மனு அளித்தும் எவ்விதமான பலனும் ஏற்படவில்லை எனவும் கூறி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, நல்லசிவத்தை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story