ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 April 2022 10:28 PM GMT (Updated: 11 April 2022 10:28 PM GMT)

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவசர கூட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்வுக்கான சீராய்வு செய்வது குறித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஆணையாளர் சிவக்குமார், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரி சீராய்வு தீர்மானம்
முதல் தீர்மானத்தில், ‘தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்வதற்கான குழு பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தற்போது சொத்துவரி செய்வது அவசியம் என பரிந்துரைத்து உள்ளது.
 15-வது மத்திய நிதி ஆணையம் 2022-2023 ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் பெறுவதற்கு மொத்த ஆண்டு மதிப்பில் சொத்து வரி விகிதம் எவ்வளவு என அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி வசூலில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து உள்ளது. 
தூய்மை இந்தியா, அம்ருத் ஆகிய திட்டங்களுக்கு மானிய நிதி பெற சொத்து வரி, காலிமனை வரி சீராய்வு செய்வது அவசியமாகிறது’ என்றும் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் வரியும், 601 சதுர அடி முதல் 1,200 சதுர அடிவரை 50 சதவீதம், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடிவரை 75 சதவீதம், 1,800 சதுர அடிக்கு மேல் 100 சதவீதம் எனவும் வரி உயர்த்தப்படும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
சொத்து வரி சீராய்வு தொடர்பான விளம்பரம் செய்வது,  அரசிதழில் பிரசுரம் செய்வதற்கு மாமன்ற அனுமதி பெறுவது என்ற தீர்மானம் என மொத்தம் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கால அவகாசம்
இதுதொடர்பாக கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஆணையாளர் சிவக்குமார் கூறும்போது, தற்போது சீராய்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 
இது தமிழக அரசு வழங்கி உள்ள வழிகாட்டு முறைகளின் படி, நமது அண்டை மாநகராட்சியாக உள்ள கோவை மாநகராட்சியின் வரி விதிப்பின் அடிப்படையில் போடப்பட்டு இருக்கிறது.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து பொதுமக்களின் கருத்து கேட்பு, மாநகராட்சியில் உள்ள அனைத்து கட்டிடங்களின் அளவுகளை மறு சீராய்வு செய்வதற்கான படிவங்கள் வழங்கி அதனை பெற்றுக்கொள்வது. 
பொதுமக்களின் கருத்துகளை அரசுக்கு தெரிவிப்பது. அது தொடர்பான வழிகாட்டு முறைகள் பெறுவது. பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுவது. வரி இறுதி நிர்ணயம் செய்து மாவட்ட அரசிதழில் வெளியிடுவது என்று ஜூன் மாதம் வரை, என 3 மாதங்கள் காலஅவகாசம் உள்ளது. 
ஜூலை மாதம் முதல் புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வரும். தற்போது கடந்த 31-3-2022 வரையான வரி விதிப்பு பெற்றவர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரியை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு ஆணையாளர் சிவக்குமார் கூறினார்.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
முன்னதாக கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் அ.தி.மு.க. ஆட்சியின் போது போடப்பட்ட திட்டங்களால் அதிக நிதி விரயம் ஆனதால் இப்போது சொத்து வரி விதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் தவறுகளால் மட்டுமே இந்த சொத்து வரி உயர்வு ஏற்பட்டு உள்ளது என்றும், 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. 200 சதவீதம் சொத்து வரி உயர்வு கொண்டு வந்தது. அதனை தி.மு.க. அரசு குறைத்து உள்ளது என்றும் கூறினார்கள்.
இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சொத்து வரி உயர்வு குறித்து பேசினால், மாமன்றத்தில் வேறு விஷயங்கள் பேசப்படுகிறது. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் வெளிநடப்பு செய்தனர். 
ஆண் கவுன்சிலர்கள் கருப்பு சட்டையும், பெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலையும் அணிந்து வந்தனர். அவர்கள் சொத்து வரியை ரத்து செய் என்று கோஷம் எழுப்பியபடி வெளியே சென்றனர். பின்னர் அவைக்கு வரவில்லை.

Next Story