எங்கள் வார்டு பிரச்சினைகளை கேட்பது இல்லை: மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு- மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை


எங்கள் வார்டு பிரச்சினைகளை கேட்பது இல்லை: மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு- மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 11 April 2022 10:28 PM GMT (Updated: 11 April 2022 10:28 PM GMT)

ஈரோடு மாநகராட்சியின் வார்டுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினால் மதிப்பது இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர்.

ஈரோடு
ஈரோடு மாநகராட்சியின் வார்டுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினால் மதிப்பது இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும், மாநகராட்சியின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர்.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
ஈரோடு மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சு.நாகரத்திரனம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சொத்து வரி சீராய்வு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதுபற்றிய விவாதம் நடந்தது.
அப்போது கவுன்சிலர்கள் தரப்பில் அதிகாரிகளை குற்றம்சாட்டி புகார்கள் கூறப்பட்டன. அவை வருமாறு:-
ஒரு மாநகராட்சியில் வரி வசூல் செய்வது என்பது மக்களின் அடிப்படை தேவைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், ஈரோடு மாநகராட்சியில் மக்களின் அடிப்படை தேவையான சாலைகள், குடிநீர், வீதி விளக்குகள், சாக்கடை தூய்மைப்பணி என்று எந்த ஒரு தேவையும் நிறைவேற்றப்படவில்லை.
மதிப்பது இல்லை
இதுதொடர்பாக கவுன்சிலர்களாகிய நாங்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் எங்களை மதிப்பதே இல்லை. எங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதும் இல்லை. எங்களை மதிப்பதும் இல்லை. அதிகாரிகள் எங்களை மதிக்காமல் இருந்தால் பொதுமக்களிடம் நாங்கள் எப்படி பதில் கூற முடியும்.
இந்த மாமன்றத்தில் பல புகார்களை நாங்கள் வைக்கிறபோது அதற்கு அதிகாரிகள் தரப்பில் காரணங்கள் கூறப்படுகிறது. எங்களுக்கு காரணங்கள் தேவை இல்லை. தீர்வு வேண்டும். தீர்வு காணத்தான் நாங்களும், அதிகாரிகளாகிய நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால், எந்த ஒரு விஷயத்துக்கும் உரிய தீர்வு காணாமல், ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறார்கள்.
நூலகம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த ஆட்சியை அளித்து வருகிறார். ஆனால், கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை எங்கள் மீது சுமத்த பார்க்கிறீர்கள்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் நூலகம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த நூலகத்தில் மேற்கூரை உடைந்தும், புத்தக அலமாரிகள் உடைந்தும் கிடக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தினசரி வந்து செல்லும் இந்த நூலகத்தை பராமரிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இல்லை என்பதால், அனைத்து பூங்காக்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
குப்பை சேகரிக்கவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கூட்டத்திலேயே விடுத்தும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வார்டுகளுக்கு தூய்மைப்பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள பணியாளர்களை வேறு பணிகளுக்காக அனுப்பினால், வார்டுகளில் தூய்மை பணி செய்ய முடியாது. தூய்மைப்பணியை விரைவுப்படுத்த வேண்டும்.
பெரியார் படம்
புதியதாக சொத்து வரி விதிப்பு செய்யப்படும்போது, இதுவரை விதிக்கப்பட்டு உள்ள வரி எவ்வளவு, புதிதாக விதிக்கப்படும் வரி எவ்வளவு என்பதை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் இதுபற்றி நாங்கள் கூற முடியும்.
அதிகாரிகளிடம் நாங்கள் வார்டுகளின் தேவைகள் பற்றி பேசினால் எங்கள் தொலைபேசி அழைப்பை ஏற்பது இல்லை. கவுன்சிலர்களாகிய எங்களிடம் பேசுவதை தடுக்கும் அளவுக்கு என்ன கவுரவப்பிரச்சினை. அவர்கள் எங்களை தேடி வரவேண்டாம். சொல்லும் இடத்துக்கு நாங்கள் வருகிறோம். எங்களுக்கு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தால் போதும். அதுமட்டுமின்றி இது கலைஞர் வழியிலான ஆட்சி என்பதையும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் சரமாரியாக அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி பேசினார்கள்.
தூய்மை பணியாளர்கள்
இவர்களின் கோரிக்கைகளுக்கு ஆணையாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர். மாநகர நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 1,535 தூய்மை தொழிலாளர்கள் தேவை. ஆனால் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 1,271 பேர் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களிடம் சராசரியாக 20 சதவீதம் பேர் தினசரி பணிக்கு வருவதில்லை. எனவே கூடுதலாக 80 முதல் 100 புதிய பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதன் மூலம் துப்புரவுப்பணி சீரமைக்கப்படும் என்றார்.
1-ம் மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி பேசும்போது, தந்தை பெரியார் தலைவராக பதவி வகித்த பெருமை உடைய இந்த மாமன்றத்தில் அவரது உருவப்படம் அமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் கட்டப்படும் புதிய கட்டிடத்துக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என்றார். கூட்டத்தில் மண்டல தலைவர் மு.ப.சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் செல்லப்பொன்னி, கோகிலவாணி மணிராசு, கவுசல்யா, ஸ்ரீஆதி கே.ஸ்ரீதர், மணிகண்டராஜா, சபுராமா மின்ஹாக், ரமேஷ் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக கவுன்சிலர் கோகிலவாணி மணிராசு பேசியபோது, கூட்டத்தை முடித்து விட்டதாக ஆணையாளர் மேடையில் இருந்து இறங்கி சென்றதும், அவரைத்தொடர்ந்து மேயர் பதில் அளிக்காமல் சென்றதும் தி.மு.க. கவுன்சிலர்களுக்கிடையே அதிருப்தி ஏற்படுத்தியது.

Next Story