கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விவசாய சங்கங்களின் ஆதரவும் -எதிர்ப்பும்


கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விவசாய சங்கங்களின் ஆதரவும் -எதிர்ப்பும்
x
தினத்தந்தி 13 April 2022 9:07 PM GMT (Updated: 13 April 2022 9:07 PM GMT)

கீழ்பவானி வாய்க்காலில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக விவசாய சங்கங்களின் ஒரு தரப்பு ஆதரவும் இன்னொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக விவசாய சங்கங்களின் ஒரு தரப்பு ஆதரவும் இன்னொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
சீரமைப்பு பணிகள்
பவானிசாகர் அணை எப்படி மதகு பகுதியை தவிர்த்து 8½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்ணால் கட்டப்பட்டு இருக்கிறதோ, அதுபோல் 125 மைல் தூரமும் கீழ்பவானி வாய்க்கால் மதகு பகுதிகளை தவிர கரைகள் அனைத்தும் மண்ணால் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மண்ணின் பலத்துக்காக கீழ்பவானி கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டு, இயற்கை முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கீழ்பவானி வாய்க்கால் திறக்கப்பட்டு 65 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆங்காங்கே கரைகளில் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது உடைப்பு ஏற்படுவதும், உடனடியாக சீரமைக்கப்படுவதும் என்று தொடர்ந்து வருகிறது. எனவே கீழ்பவானி வாய்க்காலை முற்றிலும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் இருந்து எழுந்தது. அதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலை முற்றிலுமாக கான்கிரீட் தளமாக அமைப்பது என்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுப்பணிகள் நடந்தன. ஆனால், இந்த திட்டத்துக்கு ஒட்டு மொத்தமாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே தேவையான இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பது என்றும் கான்கிரீட் சுவர்கள் அமைத்து கரைகள் அமைப்பது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து, அதன்படி கீழ்பவானி சீரமைப்பு பணிகள்தொடங்கி நடந்து வருவதாக தெரிகிறது.
எதிர்ப்பு
ஆனால், இதுதொடர்பாக விவசாயிகள் மத்தியில் ஆதரவு, எதிர்ப்பு என்று 2 விதமான கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது கீழ்பவானி வாய்க்காலில் ஒட்டு மொத்தமாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது என்றும், இதனால் கீழ்பவானியில் வரும் தண்ணீர் கசிவு நீராக விவசாய நிலங்களுக்கு கிடைக்காது என்றும், கசிவு நீரால் பயன்பட்டு வந்த கிராமங்கள், குடிநீர் இல்லாமல் பாதிக்கப்படும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். எனவே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று கீழ்பவானி விவசாயிகள் நல சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், சிறுகுறு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், இயற்கை வாழ்வுரிமை இயக்கம், நொய்யல் மாசுப்பட்ட நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம், கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு, கீழ்பவானி பாசன சபை தலைவர்கள், ஈரோடு மாவட்ட கரும்பு வளர்ப்போர் சங்கம், ஈரோடு மாவட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் வருகிற 24-ந் தேதி கோரிக்கை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதரவு
இந்தநிலையில் ஈரோட்டில் நேற்று கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் பி.காசியண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் கே.ஆர்.தங்கராஜு, துணைத்தலைவர்கள் ஏ.ராமசாமி, கே.ஆறுமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்கு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவின் படி கீழ்பவானி பாசனப்பகுதிகளில் பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கீழ்பவானி பாசன திட்டத்தில் உள்ள அனைத்து கொப்பு வாய்க்கால்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன. எனவே அனைத்து மதகுகளின் கடைக்கோடிகள் வரை பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல சிரமமில்லாமல் இருக்க சிறப்பு நிதி ஒதுக்கி மறுசீரமைப்பு செய்து தர வேண்டும்.
உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெளிவு வேண்டும்
கீழ்பவானி வாய்க்கால் பாசனம் விவசாயிகள் மட்டுமின்றி, ஈரோடு மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம், கரூர் மாவட்டங்களின் பகுதிகளில் மக்களின் ஒரே நீராதாரமாக விளங்குகிறது. கீழ்பவானி வறண்டால் ஈரோடு மாவட்டம் வறண்ட பூமியாகி விடும்.
எனவே கீழ்பவானி குறித்த உண்மை தகவல் மக்களுக்கு சென்று சேர வேண்டும். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இது தொடர்பாக பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சினை எழுந்து உள்ளது. எனவே உரிய துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எது உண்மை நிலை. விவசாயிகளின் ஆதரவு, எதிர்ப்பு எது சரியானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story