தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி-திருநங்கை ரெஹனாபானு பேட்டி


தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி-திருநங்கை ரெஹனாபானு பேட்டி
x
தினத்தந்தி 15 April 2022 1:09 PM GMT (Updated: 15 April 2022 1:09 PM GMT)

திருநங்கைகள் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் போலீசாக தேர்வான திருநங்கை ரெஹனாபானு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்ததால் தான் வெற்றிபெற முடிந்தது என்றார்.

திருச்சி, ஏப்.16-
திருநங்கைகள் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் போலீசாக தேர்வான திருநங்கை ரெஹனாபானு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்ததால் தான் வெற்றிபெற முடிந்தது என்றார்.
மரக்கன்று நடும் விழா
திருநங்கைளின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையிலும் தனிநல வாரியம் ஏப்ரல் 15-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. அன்றைய தினத்தை திருநங்கைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று திருச்சியில் திருநங்கை தினம் கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, தலைசிறந்த உழைப்பாளி திருநங்கைகள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு, கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமை தாங்கி மரக்கன்று நட்டார். இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சேரன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத்தொடர்ந்து திருநங்கைகள் பாலியல், பிச்சையெடுத்தல் உள்ளிட்ட தொழிலை விட்டு, விட்டு உழைக்கும் நிலைக்கு உயர்ந்த திருநங்கைகள் அழகுகலை பயிற்சியாளர் காஜல், எம்.காம்.பட்டதாரியான அழகு, நவல்பட்டில் உள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெரும் ரெஹனா பானு உள்ளிட்ட 11 பேர் அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
அப்போது போலீஸ் பணிக்கு தேர்வான திருச்சியை சேர்ந்த திருநங்கை ரெஹனாபானு கூறியதாவது:-
பெற்றோர் ஆதரவு
நான் பிளஸ்-2 படிக்கும்போது எனக்கு உடல் ரீதியான மாற்றம் ஏற்பட்டது. படிப்பை தொடரமுடியாமல் பாதியில் நிறுத்தி விட்டு, தனித்தேர்வராக பிளஸ்-2 எழுதி தேர்ச்சி பெற்றேன். கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தேன். 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றேன்.
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த நான், எனது பெற்றோர் தந்த ஆதரவினால் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி எடுத்தேன். அதற்கு கிடைத்த வெற்றிதான் போலீசாக நான் தேர்வாகி இருப்பது. தற்போது கடந்த 1 மாதமாக திருச்சி நவல்பட்டில் உள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியில் போலீசுக்கான பயிற்சி எடுத்து வருகிறேன். இன்னும் 7 மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன். எனவே, திருநங்கைகள் எல்லோரையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறு. என்னைப்போல திருநங்கைகள் பலரும் விடா முயற்சியை கைவிடாது இருந்தால் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வரமுடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குடும்பம்
திருநங்கை ரெஹனா பானு, திருச்சி பீமநகர் சின்னச்சாமி நகரை சேர்ந்தவர். தாயார் சைதானி. இல்லத்தரசி. தந்தை ஷேக் தாவுத், ஆட்டோ டிரைவர் ஆவார். உடன் பிறந்த ஒரு சகோதரி, சகோதரன் உள்ளனர்.

Next Story