பொது பிரச்சினை குறித்த வழக்குகளுக்கு உடனடி தீர்வு


பொது பிரச்சினை குறித்த வழக்குகளுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 19 April 2022 4:40 PM GMT (Updated: 19 April 2022 4:42 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பொது பிரச்சினை குறித்த வழக்குகளுக்கு, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மூலம் உடனடியாக தீர்வு காணலாம் என மாவட்ட நீதிபதி சுபாஅன்புமணி தெரிவித்துள்ளார்.

கடலூர், 

கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாஅன்புமணி நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள மாற்றுத்தீர்வு மையத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் இயங்கி வருகிறது. அதிகளவில் உள்ள வழக்குகளை விரைவாக செலவின்றி முடித்து வைக்கவே, மக்கள் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது பொது பயன்பாட்டு சேவை குறித்த பிரச்சினைகளை பொதுமக்கள் மிக எளிய முறையில் வேகமாகவும், பணவிரயமில்லாமலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த நீதிமன்றத்தை அணுகி விரைவாக தீர்த்துக் கொள்ளலாம்.

எளிதில் தீர்வு

அதாவது போக்குவரத்து சேவை, தபால், தந்தி, தொலைபேசி சேவை, மின்சாரம், ஒளி, நீர் ஆகிய பொதுத்துறையினரால் வழங்கப்படும் சேவை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சேவை, மருத்துவமனை மற்றும் மருந்தக சேவை, காப்பீடு, மனை விற்பனை குறித்த சேவை, கல்வி நிலையங்கள் பற்றிய சேவைகள் குறித்த பிரச்சினைகள் எழும் போது, மக்கள் நீதிமன்றத்தை அணுகி மனுத்தாக்கல் செய்து, தங்களது பிரச்சினைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்குகளை, பொது பயன்பாட்டு சேவைகளுக்கான நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் முன்பு, வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண மனுவாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணம் கிடையாது.

மேல்முறையீடு தாக்கல்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் முடிவு, நீதிமன்ற தீர்ப்பாணைக்கு சமமானது. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவே இறுதியானது.
நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கும், மக்கள் நீதிமன்றத்திற்கும் வேறுபாடு உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மட்டுமே செய்ய முடியும். ஆனால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். மேலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பினை, அந்தந்த உள்ளூர் உரிமையியல் நீதிமன்றங்களின் மூலம் நிறைவேற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த தீர்ப்பின் பலனை பெறலாம்.

பொது பிரச்சினை

கடந்த ஆண்டு பொது பிரச்சினை தொடர்பாக 16 மனுக்கள் பெறப்பட்டதில், 8 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. எனவே, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பொது பயன்பாட்டு சேவையாக வரையறை செய்யப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story