அ.தி.மு.க.- தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


அ.தி.மு.க.- தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2022 5:56 PM GMT (Updated: 20 April 2022 5:56 PM GMT)

தா.பழூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தா.பழூர், 
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அசோகன் கூறுகையில், தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் மட்டுமே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட எண்ணிக்கை வரும். ஆனால் இந்த தகவலை மூடிமறைத்து தமிழக முதல்வர் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார். அதேபோன்று கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, இலவச லேப்டாப் போன்ற எண்ணற்ற பல நல்ல திட்டங்களை தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தபோது, தி.மு.க. கவுன்சிலர்கள் அண்ணாதுரை, முருகானந்தம், செல்வி ஆகியோர் அதனை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றியக்குழு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய கணக்கர் அறியதங்கம் தீர்மானங்களை வாசித்தார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story