ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்


ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு  வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 April 2022 7:39 PM GMT (Updated: 20 April 2022 7:39 PM GMT)

கடலூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கச்சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கடலூரை அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள கரிக்கன் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து 18 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. 
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் நிலத்தில் உள்ள ஆ்க்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றிவிட்டு இடத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய் துறையினர் கரிக்கன்நகருக்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதிகாரிகள் வீடுகளை இடிக்காமல் இருந்து வந்தனர். 

சாலை மறியல்

பின்னர் நேற்று காலை கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் தலைமையில் தாசில்தார் ஸ்ரீதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றுவதற்காக வந்தனர். இதையறிந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். 
அப்போது ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முயன்றபோது அங்கே திரண்டு நின்ற பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தோடு, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபரும், ஒரு பெண்ணும் திடீரென்று மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தங்கள் உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் ஓடி சென்று அவர்களிடம் இருந்த கேன்களை பிடுங்கி வீசி எறிந்தனர். 
வாலிபர் தற்கொலைக்கு முயன்றதை பார்த்து தாய் கதறி அழுத அவரது தாய் சாலையில் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து மீட்டனர். 

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார். இதற்கு இங்கு வசிக்கக்கூடிய 18 நபர்களில் 2 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

ஒருவாரம் அவகாசம்

இதையடுத்து முதற்கட்டமாக தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினர். அப்போது வீடுகளை காலி செய்ய ஒருவாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு வீட்டை மட்டும் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்தனர். மிதமுள்ள 17 வீடுகளின் உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக காலி செய்ய வேண்டும் என்று கூறி அதிகாரிகள் அனுமதி அளித்தனர். 
கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்க்ள அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story