திருத்தணி அருகே 6 ஆண்டுகளாகியும் கட்டி முடிக்கப்படாத தொகுப்பு வீடுகள்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருத்தணி அருகே 6 ஆண்டுகளாகியும் கட்டி முடிக்கப்படாத தொகுப்பு வீடுகள்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 April 2022 11:17 AM GMT (Updated: 21 April 2022 11:17 AM GMT)

திருத்தணி அருகே 6 ஆண்டுகளாகியும், தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடு கட்ட ஆணை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடியில், இருளர் குடியிருப்பு உள்ளது. இங்கு 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் குடிசைகள் இடிந்து விழுந்தும், பலத்த காற்று வீசும்போது குடிசைகள் சேதம் அடைவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து, இருளர்கள் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதன் பயனாக, கடந்த 2015-16-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ள தடுப்பு நிவாரண நிதி உதவி திட்டத்தின் கீழ், தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் (இந்திரா காந்தி ஆவாஸ் யோசனா) மதிப்பீட்டில் தளம்போட்ட வீடுகள் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் 23 பயனாளிகளை தேர்வு செய்து ஆணைகள் வழங்கப்பட்டன.

இருளர்களால் முன்பணம் செலவழித்து வீடுகள் கட்டி கொள்ள முடியாது என்பதால், ஒன்றிய நிர்வாகம் தும்பிகுளம் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவரை ஒப்பந்ததாராக நியமித்து 23 வீடுகள் கட்டித்தருவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, ஒப்பந்ததாரர் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் பயனாளிகளின் வங்கி கணக்கு புத்தகங்கள் பெற்றுகொண்டு, அதே ஆண்டில் வீடுகள் கட்டும் பணிகளை தொடர்ந்தார்.

பணி பாதியில் நிறுத்தம்

இதில் 8 வீடுகள் மட்டும் தளம்போடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 15 வீடுகள் 7 அடி உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனிநபர் வீடுகட்டும் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார். தற்போது இருளர்கள் மழை மற்றும் வெயில் காலத்தில் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து 6 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை, முழுமையாக முடித்து தரவேண்டும் என்று இருளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. சத்யா கூறுகையில்:-

இருளர்களின் வீடுகள் கட்டி முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும், வீடு கட்டுமான பணி பாதியில் நிறுத்தியதற்கு என்ன காரணம் என கண்டறிந்து, விரைந்து முடித்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story