கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை
ஓவேலி பேரூராட்சிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்ததால், வனத்துறையினரிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
கூடலூர்
ஓவேலி பேரூராட்சிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்ததால், வனத்துறையினரிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
வனத்துறை தடை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சியில் சட்டப்பிரிவு-17 வகை நிலங்கள் உள்ளது. இங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருக்கிறது. இதற்கிடையில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சோதனைச்சாவடி உள்ளது.
இங்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்த சோதனைச்சாவடி வழியாக வாகனங்களில் கட்டுமான பொருட்களை ஓவேலி பேரூராட்சி பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று இரவில் கூடலூரில் இருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை ஓவேலிக்குள் விடாமல் வனத்துறையினர் தடுத்தனர். இதனால் வாகனங்களில் வந்தவர்களுக்கும், வனத்துறையினரும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் இன்று மதியம் 2 மணிக்கு கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு வாகனத்தையும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.இதை அறிந்த ஓவேலி பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் மண்டபன் ஷாஜி, அந்த சோதனைச்சாவடிக்கு சென்றார். பின்னர் கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தை அனுமதிக்க வலியுறுத்தினார்.
அப்போது, ஓவேலிக்குள் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனவே அனுமதி வழங்க முடியாது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர் உள்பட வாலிபர்கள் மற்றும் வனத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கட்டுமான பொருட்களை தலையில் சுமந்தவாறு சோதனைச்சாவடியை கடந்து ஓவேலிக்குள் சென்றனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்து அங்கு வந்த போலீசார், ‘அதிகளவில் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் குறிப்பிட்ட சில வாகனங்களை மட்டும் இரவு நேரத்தில் அனுமதிப்பது ஏன்?. குறைந்த அளவில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் மற்றவர்களை தடுப்பது ஏன்? என்று வனத்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில் தாசில்தார் சித்தராஜ் விரைந்து வந்து, கவுன்சிலர் மற்றும் வாலிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த பிரச்சினைக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story