நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
கூடலூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கோடை காலம்
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படும். மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கிவிட்டால் நீர்நிலைகள் வறண்டு விடும்.
இதற்கிடையில் கூடலூர் பகுதியில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஓவேலி வனப்பகுதியில் ஆத்தூர், பல்மாடி உள்பட பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூர் நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
தண்ணீர் வரத்து குறைந்தது
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மழை பெய்யாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் பசுமை திரும்பி வருகிறது. மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி குடிநீர் வினியோக அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது கூடலூரில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. தொடர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. குறிப்பாக தடுப்பணைகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
இதுகுறித்து கூடலூர் நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:-
கோடை மழை பெய்ததால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. தற்போது மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இதனால் தடுப்பணைகள் உள்பட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. எனவே அடுத்த மாதம்(மே) முதல் கோடைகாலத்தையொட்டி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story