சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 23 April 2022 8:21 PM IST (Updated: 23 April 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

நண்பர் வீட்டிற்கு சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செல்வம் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 8-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்த சிறுமி, அதன் பிறகு படிக்கவில்லை. இந்த நிலையில் செல்வத்திற்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற செல்வம், சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள், செல்வத்தை கண்டித்தனர். இதையடுத்து கடந்த 22.7.2020 அன்று செல்வம், அந்த சிறுமியை ரெட்டிச்சாவடியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு கடத்தி சென்றார். அங்கு அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

10 ஆண்டு சிறை

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட செல்வத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ரூ.5 லட்சம்

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Next Story